பாக். அரசு மீது குற்றம்சாட்ட வேண்டாம்: சர்தாரி வேண்டுகோள்
திங்கள், 1 டிசம்பர் 2008 (15:32 IST)
இந்தியா-பாகிஸ்தான் இடையே போரை ஏற்படுத்தும் சக்தி பயங்கரவாதிகளுக்கு உள்ளதாக தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் அரசு மீது குற்றம்சாட்டுவதை இந்தியா நிறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மும்பையில் 3 நாட்களாக நடந்த பயங்கரவாத தாக்குதலில் அயல்நாட்டவர் உட்பட 200 பேர் பலியாகினர் என்பதற்காக பாகிஸ்தானை தண்டிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வெளியாகும் பைனான்ஷியல் டைம்ஸ் என்ற நாளிழதழில் வெளியாகியுள்ள செய்தியில், மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாதக் குழுக்களே காரணம் என விசாரணையில் தெரிய வந்தாலும், அதற்காக தமது அரசை இந்தியா குற்றம்சாட்டக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அதிபர் சர்தாரி கோரிக்கை விடுத்துள்ளார்.
அணு ஆயுத வல்லமை படைத்த இரு நாடுகளிடையே மீண்டும் போரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பயங்கரவாத சக்திகள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ள சர்தாரி, மும்பை தாக்குதலில் லஷ்கர்-ஈ-தயீபாவுக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தாலும், அவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு போராடி வருவதையும் இந்தியா கருத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீதான தாக்குதல், ஈராக்கில் போர்ச் சூழல் தீவிரவாத அமைப்புகள் ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டியுள்ள சர்தாரி, இதேபோல் இந்தியா-பாகிஸ்தான் இடையே போரை ஏற்படுத்தும் நோக்கில் பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தருணத்தில் இருவரும் ஒன்றாக ஓர் அணியில் நின்று பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும் எனறு கூறியுள்ளார்.