இந்தியா-பாக். பேச்சுவார்த்தை: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்க முடிவு!

புதன், 26 நவம்பர் 2008 (13:09 IST)
எல்லை தாண்டிய யங்கரவாதம், விதிமீறிய குடியேற்றம், கள்ளநோட்டு புழக்கம் ஆகிய பிரச்சனைகளில் உள்நாட்டு உளவு நிறுவனங்களிடையே நிறுத்தப்பட்ட ஒத்துழைப்பை மீண்டும் இருதரப்பிலும் துவக்குவது என இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே, உள்துறை செயலர்கள் அளவிலான 5வது சுற்று பேச்சுவார்த்தை பா‌கி‌ஸ்தா‌‌ன் தலைநக‌ர் இஸ்லாமாபாத்தில் நேற்று துவங்கியது.

இந்திய மத்திய உள்துறை செயலர் மது‌க்கர் குப்தா தலைமையில் இந்திய அதிகாரிகள் அடங்கிய குழுவினரும், பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு உள்துறை செயலர் சையது கமால் ஷா தலைமையிலான குழுவினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இதில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஆதாரமின்றி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது கூடாது என இருதரப்பினரும் ஒப்புக்கொண்டதாக உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேபோல் பயங்கரவாத ஒழிப்புக்காக இருதரப்பிலும் உருவாக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை அமைப்பின் கீழ் கூடுதல் அயலுறவு செயலர் அடங்கிய இரு நபர் கூட்டமைப்பை ஏற்படுத்துவது என்றும், இதைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத ஒழிப்பு கூட்டு நடவடிக்கை அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த உடன்பாடு, இருதரப்புக்கு இடையிலான உறவின் முன்னேற்றமாக கருதப்படுகிறது.

இதேபோல் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவது, ஆள் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவின் சி.பி.ஐ.யும், பாகிஸ்தானின் எஃப்.ஐ.ஏ.வும் கூட்டாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு தேவையான திட்டங்களை தீட்டியுள்ளதாகவும் உள்துறை செயலர் சையத் கமல் ஷா தெரிவித்துள்ளார்.

விதிமீறிய குடியேற்றத்தை தடுக்க பயோமெட்ரிக் முறையை அனைத்து இருநாட்டு எல்லைப் பகுதியில் உள்ள சோதனை மையங்களிலும் நிறுவவும், கைதிகளை பரிமாறிக் கொள்ளும் விடயத்திலும் இரு நாடுகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீதிக் குழுவின் பரிந்துரையை ஏற்பது என்றும் இரு தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்