பாங்காக் விமானநிலையம் முற்றுகை: போக்குவரத்து முடக்கம்!

புதன், 26 நவம்பர் 2008 (11:40 IST)
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சர்வதேச விமானநிலையத்தை, அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால், இன்று முழுவதும் விமானநிலைய போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாங்காக்கில் உள்ள ஸ்வர்ணபூமி சர்வதேச விமானநிலையத்தில் குவிந்திருந்த கிளர்ச்சியாளர்கள் மத்தியில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், இதில் 2 பேர் படுகாயமடைந்ததாகவும் அவசர மருத்துவ உதவிப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், விமான போக்குவரத்திற்கு தகவல் தொடர்பு அளிக்கும் பிரிவின் செய்தித் தொடர்பாளர் நொய்ராட் கூறுகையில், தாய்லாந்து விமானநிலையம் இன்று மதியம் வரை தற்காலிகமாக மூடப்படும் என்று முதலில் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டாலும், அடுத்த சில நிமிடங்களில் நாள் முழுவதும் செயல்படாது என அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அந்நாட்டுப் பிரதமர் சோம்சாய் வோங்ஸ்வாட் எதிராக போராட்டம் நடத்தி வரும் ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று காலை ஸ்வர்ணபூமி விமான நிலையத்தை முற்றுகையிட்டனர். இதன் காரணமாக அங்குள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்