நீர்ப் பங்கீடு பிரச்சனை: 2014க்குள் பாக். வறண்ட பகுதியாகும்!
திங்கள், 24 நவம்பர் 2008 (18:11 IST)
சிந்து நதிநீர்ப் பங்கீட்டு உடன்படிக்கையை மீறும் வகையில், சிந்து மற்றும் அதன் கிளை நதிகளில் இந்தியா கட்டி வரும் அணைகளினால், வரும் 2014இல் பாகிஸ்தான் வறண்ட பிரதேசமாக மாறிவிடும் என பாகிஸ்தான் நீர்வள ஆணையத்தின் செயலர் சையது ஜமாத் அலி ஷா இன்று குற்றம்சாற்றியுள்ளார்.
சிந்து மற்றும் அதன் பல்வேறு கிளை நதிகளில் இந்தியா அணைகள் கட்டியுள்ளது, தொடர்ந்து பல அணைகளை கட்டி வருகிறது. இதன் மூலம் சிந்து நதிநீர்ப் பங்கீட்டு உடன்படிக்கையை இந்தியா மீறி வருகிறது என்றும் அவர் கூறியதாக டெய்லி டைம்ஸ் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
சிந்து நதிநீர் பங்கீட்டு உடன்படிக்கையின்படி, நதி நீரைத் தடுத்து இந்தியா மின்சாரம் தயாரித்துக் கொள்ளலாம். ஆனால் பாகிஸ்தானிற்கான நீரை தடுக்க முடியாது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 19 முதல் 28ஆம் தேதி வரை மட்டுமே பாகிஸ்தானுக்கான நீர் தடுக்கப்பட்டதாக இந்தியா கூறியுள்ளதை ஏற்க முடியாது. செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீர் தடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சீனாப் நதியின் குறுக்கே இந்தியா கட்டியுள்ள பக்ளிஹார் அணையால் தங்களுக்கு வரவேண்டிய நீரின் அளவு குறைந்துவிட்டது என்று பாகிஸ்தான் குற்றம்சாற்றியுள்ளது குறித்து ஆராய, இந்திய நீர்வள ஆணையர் தலைமையிலான குழுவினர் வரும் 29ஆம் தேதி பாகிஸ்தான் செல்லவுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாப் மட்டுமின்றி, ராவி, பியாஸ், சட்லெஜ் நதிகளிலும் பாகிஸ்தானிற்கு வரவேண்டிய நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் எழுந்துள்ள சிக்கல் கடுமையானது. இதற்கு இரு நாடுகளும் சிந்து நதி நீர் பகிர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உடனடியாகத் தீர்வு காணவில்லை என்றால், இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையில் மேலும் ஒரு போர் மூளலாம்” என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராகவும், அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் சுஜாத் ஹூசேன் எச்சரித்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.