மனிதாபிமான உதவிகளைச் சிறிலங்கா அரசு தடுக்கிறது: சர்வதேச மன்னிப்பு சபை!
வியாழன், 20 நவம்பர் 2008 (18:26 IST)
வன்னியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 3 லட்சம் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யும் முயற்சிகளை சிறிலங்கா அரசு தடுக்கிறது என்று சர்வதேச மன்னிப்பு சபை குற்றம்சாற்றியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச மன்னிப்பு சபை புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனடியாகத் தேவை.
வடகிழக்குப் பருவ மழை நெருங்கி வரும் சூழலில் 4,000 குடும்பங்களுக்கு 2,100 தற்காலிகக் கூடாரங்களே வழங்கப்பட்டுள்ளன. மேலும் 20,000 குடும்பங்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளன.
எதிர்காலத்தில் இன்னும் 3,00,000 மக்கள் தற்காலிகத் தங்குமிடங்களுக்கு வரும் சூழல் ஏற்படலாம். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாக சிறிலங்கா அரசு தெரிவித்தாலும், அது சர்வதேச விதிகளைக் கடைப்பிடிப்பதில்லை.
ஒருவருக்கு ஒரு நளைக்கு 2,100 கலோரி உணவு தேவை என்ற நிலையில், வன்னியில் உள்ள மக்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 கலோரிக்கும் குறைவான உணவே கிடைக்கிறது என்று உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் வன்னிக்கு செல்வதற்கும் பாதுகாப்பாக உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்கும் சிறிலங்கா அரசு அனுமதி வழங்க வேண்டும்.