பூநகரியை கைப்பற்றிவிட்டோம் - சிறிலங்க ராணுவம்!

சனி, 15 நவம்பர் 2008 (17:07 IST)
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக இருந்துவந்த பூநகரியை கைப்பற்றிவிட்டதாக சிறிலங்க ராணுவம் அறிவித்துள்ளது!

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம், விடுதலைப் புலிகளின் முக்கிய தளமான பூநகரிக்குள் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படை இன்று காலை நுழைந்துவிட்டதாகவும், இலங்கைத் தீவின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான முக்கிய முன்நகர்வு இது என்றும் தெரிவித்துள்ளது.

பூநரிக்குள் 10 கி.மீ. வரை படைகள் முன்னேறிவிட்டதாகவும், மேற்கு கரையோரத்தின் கடைசி பகுதியையும் அவர்கள் இழந்துவிட்டதாகவும் கூறியுள்ள சிறிலங்க ராணுவம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைநகரம் என்று சொல்லப்படும் கிளிநொச்சியை நெருங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், டெவில்ஸ் பாய்ண்ட் எனப்படும் பகுதி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதகாவும், கடற்புலிகளின் முக்கிய பகுதிகளான கிராஞ்சி, வல்லைப்பாடு, பலாவி ஆகிய பகுதிகளும் கைப்பற்றப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

கிளிநொச்சியை சுற்றி வளைத்துவிட்டதாக பல வாரங்களாக சொல்லிவந்த சிறிலங்க அரசும், சிறிலங்க இராணுவத் தலைமையும், இன்று பூநகரிக்குள் அடியெடுத்து வைத்து கிளிநொச்சியை ‘நெருங்குவதா’ கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்