பர்வேஷ் முஷாரஃப் ஒரு துரோகி, உளவாளி: அப்துல் காதிர் கான் கடும் தாக்கு!

வியாழன், 13 நவம்பர் 2008 (11:29 IST)
வட கொரியா, லிபியா நாடுகளுக்கு அணு குண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ரகசியமாக விற்றதாக குற்றம்சாற்றப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர் கான், முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃபை துரோகி, உளவாளி என்று கடுமையாக குற்றம் சாற்றியுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் ‘ஜாங’ எனும் உருது நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் பர்வேஷ் முஷாரஃபை இவ்வாறு விமர்ச்சித்துள்ள அப்துல் காதிர் கான், குடிரயரசுத் தலைவர் ஆடையை தரித்துக்கொண்டு திரிந்த அயல்நாட்டு உளவாளி முஷாரஃப் என்று சாடியுள்ளார்.

வட கொரியாவிற்கும், லிபியாவிற்கும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டதையடுத்து 2004ஆம் ஆண்டு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அப்துல் காதிர் கான், தன்னை எப்படி அவமானப்படுத்தி அதிபர் மாளிகையில் இருந்து வெளியேற்றினாரோ அதேபோன்று முஷாரஃபும் பெருமை இழந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

1999ஆம் ஆண்டிலேயே செயற்கைக்கோள் செலுத்துவதற்கு தான் அனுமதி கோரியதாகவும், ஆனால் அதனை அந்த ‘சர்வாதிகாரி’ நிராகரித்துவிட்டதாகவும் கூறியுள்ள அப்துல் காதிர் கான், “இன்றுள்ள நிலையில் முஷாரஃப் தெருவில் காலடி எடுத்து வைத்தால், மக்கள் அவரை துண்டு துண்டாக வெட்டி காக்கைக்கும், பறவைகளுக்கும் போட்டு விடுவார்கள்” என்று காட்டாமாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் ஏவுகணைத் திட்டத்திற்கு வட கொரியா, சீனா ஆகிய நாடுகளின் உதவியைப் பெறுமாறு முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோதான் தனக்கு அனுமதி அளித்தார் என்றும் கான் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்