வியாழன், 13 நவம்பர் 2008 (04:56 IST)
திட எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும் புதிய தலைமுறை கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும் சாஜில் என்ற ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்துள்ளதாக ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
திட எரிபொருள் பயன்படுத்தப்படுவதால் இந்த ஏவுகணையால் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க இயலும் என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முஸ்தஃபா முகமது நஜார் கூறியுள்ளார்.
ஏவுகணைச் சோதனை குறித்துத் தொலைககாட்சியில் அறிவித்த நாஜர், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஈரான் வான்வெளி ஆய்வு மையம் தயாரித்துள்ள அதிவேக ஏவுகணையான சாஜில், 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கவல்லது என்றார்.
புதன்கிழமை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த ஏவுகணைச் சோதனை நிகழ்ச்சி ஈரான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டது. பாலைவனப் பகுதியில் இருந்து புறப்படும் ஏவுகணை சரியாக இலக்கைத் தாக்குவதைப் போல அதில் காட்டப்பட்டது.