30 பாகிஸ்தான் கைதிகளை விடுவிக்கிறது இந்தியா!
செவ்வாய், 11 நவம்பர் 2008 (06:10 IST)
நமது நாட்டின் சிறைகளில் இருந்த 30 பாகிஸ்தானியர்களின் தண்டனைக் காலம் முடிந்ததையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். வருகிற 14 ஆம் தேதி அவர்கள் வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.
தண்டனைக் காலம் முடிவடைந்த கைதிகள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள தேசத்தின் விவரம் கண்டறியப்பட்ட கைதிகள் உடனடியாகச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று சிறைக் கைதிகள் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் நீதிக் குழு அண்மையில் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் இந்தியச் சிறைகளில் உள்ள தண்டனைக் காலம் முடிவடைந்த 30 பாகிஸ்தானியர்களை வருகிற 14 ஆம் தேதி வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் நமது அதிகாரிகள் ஒப்படைப்பர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் சிறைகளுக்கும் சென்ற நீதிக் குழு அங்குள்ள பிற நாட்டுக் கைதிகளைச் சந்தித்து விசாரணை நடத்தியது.
மேலும், இரண்டு நாடுகளும் தங்கள் வசமுள்ள கைதிகளின் விவரங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியச் சிறைகளில் 370 பாகிஸ்தானியர்கள் உள்ளதாக நமது அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர். ஆனால், இந்தியச் சிறைகளில் 600க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் இருப்பதாகவும், இதில் 150க்கும் மேற்பட்டவர்கள் தண்டனைக் காலத்தைக் கழித்து விட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.