அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 6.5 விழுக்காடாக அதிகரிப்பு!
சனி, 8 நவம்பர் 2008 (12:04 IST)
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த அக்டோபர் மாதம் வேலையில்லாத் திண்டாட்ட விழுக்காடு 6.5 ஆக உயர்ந்துள்ளது.
இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலையில்லாதோர் எண்ணிக்கை அக்டோபர் மாதம் 6,03,000 இல் இருந்து 10,10,000 ஆக அதிகரித்துள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் 6.1 விழுக்காடாக இருந்த வேலையில்லாத் திண்டாட்டம் அக்டோபரில் 0.4 விழுக்காடு அதிகரித்து 6.5 விழுக்காடாக உள்ளது என்று அமெரிக்க தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த முறை 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவின் வேலையில்லாத் திண்டாட்டம் 6.5 விழுக்காடாக இருந்தது.
மேலும், இந்த ஆண்டு முதல் பத்து மாதங்களில் 10,20,000 வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில்தான் பெருமளவிலான வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
"செப்டம்பரில் 2,84,000மும் ஆகஸ்டில் 1,27,000 வேலை இழப்புக்களும் ஏற்கட்டுள்ளன. 2008இன் முதல் 10 மாதங்களில் 10,20,000 வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன" என்று தொழிலாளர் கணக்கீட்டுத் துறை தெரிவித்துள்ளது.
உற்பத்தி, கட்டுமானம் ஆகிய துறைகள், தொழிற்சாலைகளுக்கு சேவை வழங்கும் பல்வேறு துறைகள் ஆகியவற்றில் வேலை இழப்புக்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. நலத்துறை, சுரங்கத் துறையில் வேலைவாய்ப்பு பெருகியுள்ளது.