இந்திய-அமெரிக்க உறவை வலுப்படுத்துவார் ஒபாமா: நிபுணர்கள்!

வியாழன், 6 நவம்பர் 2008 (12:46 IST)
மூன்றாம் உலகப் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளை, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒபாமா வலுப்படுத்துவார் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

PTI PhotoFILE
இதுகுறித்து தெற்கு ஆசியாவுக்கான முன்னாள் அமெரிக்க துணை அமைச்சர் கார்ல் இன்டெர்ஃபர்த் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவில் சிறந்தது என்ற கூற்றுக்கு வாழும் எடுத்துக்காட்டாக ஒபாமா திகழ்கிறார். அவருக்கு முன்பு அதிபர்களாக இருந்த புஷ், கிளிண்டன் ஆகியோர் எடுத்த இந்தியக் கொள்கைகளை ஒபாமா தொடர்ந்து கடைப்பிடிப்பார் என்பதில் தமக்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்றார்.

உலக வல்லரசுகளில் சக்திமிக்க நாடாக 21ஆம் நூற்றாண்டில் வளர்ந்துள்ள இந்தியாவின் முக்கியத்துவம் குறித்து ஒபாமா நன்கு உணர்ந்துள்ளார் என்பதால், இந்திய-அமெரிக்க உறவுகளை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும் அவர் நடவடிக்கை எடுப்பார் என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசின் மூத்த அதிகாரியாக பதவி வகித்தவரான வால்டர் ஆண்டர்சன் கூறுகையில், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஒபாமா தெரிவித்திருந்தாலும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அணு ஆயுத சோதனைக்கு தடை, அதனை இந்தியா மீறினால் எரிபொருள் வினியோகம் நிறுத்தம் உள்ளிட்ட விஷயங்களை எப்படி ஒபாமா கையாளுவார் என்பதில் கேள்வி எழுகிறது.

இந்த இரு விஷயங்களிலும் நெருக்குதல் ஏற்படுவதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்பதால் விரும்பத்தகாத நிகழ்வுகள் உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.