சீனாப் நதி நீர் பிரச்சனையால் போர் மூளலாம்: பாக். முன்னாள் பிரதமர்!

திங்கள், 3 நவம்பர் 2008 (16:23 IST)
சீனாப், ராவி உள்ளிட்ட சிந்து நதியின் கிளை நதிகளில் பாகிஸ்தானிற்கு கிடைத்துவரும் நீரின் அளவு, இந்தியா கட்டிவரும் அணைகளால் தடுப்பதனால் ஏற்படும் சிக்கல் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் ஒரு போர் மூள காரணமாகலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சவுத்ரி சுஜாத் ஹூசேன் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராகவும், அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள சவுத்ரி சுஜாத் ஹூசேன், சீனாப் நதியின் நீரை தடுத்து புதிதாக கட்டியுள்ள பக்ளிஹார் அணைக்கு கொண்டு சென்று மின்சாரம் தயாரிப்பதன் மூலம், அந்நதியில் நீர் வரத்து குறையந்துள்ளது என்று இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

“சீனாப் மட்டுமின்றி, ராவி, பியாஸ், சட்லெஜ் நதிகளிலும் பாகிஸ்தானிற்கு வரவேண்டிய நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் எழுந்துள்ள சிக்கல் கடுமையானது. இதற்கு இரு நாடுகளும் சிந்து நதி நீர் பகிர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் உடனடியாகத் தீர்வு காணவில்லை என்றால், இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையில் மேலும் ஒரு போர் மூளலாம” என்று சுஜாத் ஹூசேன் எச்சரித்துள்ளார்.

நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் உருவாகிவரும் பிரச்சனை பயங்கரவாதத்தை விட மோசமானது, எனவே அதற்கு இரு நாடுகளும் உடனடியாக சுமூகத் தீர்வு காணவேண்டியது அவசியம் என்றும், நதி நீர்ப் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்றும் சுஜாத் ஹூசேன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்