கருணா கட்சி அலுவலகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை!

புதன், 29 அக்டோபர் 2008 (01:26 IST)
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் உள்ள கருணா‌வி‌ன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் புகுந்து, அ‌ங்‌கிரு‌ந்த நா‌ன்கு பேரை சு‌‌ட்டு‌க்கொ‌ன்றது.

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு பகுதி தளபதியாக இருந்த கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன், விடுதலைப்புலிகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த 2004-ம் ஆண்டு அந்த அமைப்பில் இருந்து விலகினார்.

பி‌‌ன்ன‌ர் `தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பை தொடங்கி இராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். பிறகு, இந்த அமைப்பு அரசியல் கட்சியாக மாறி, கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது.

இக்கட்சியைச் சேர்ந்த பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமை‌ச்சராக பதவி வகித்து வருகிறார். கருணாவுக்கு இலங்கை அரசு நியமன எம்.பி. பதவி வழங்கி உள்ளது.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் புகுந்தது, அ‌ங்கு‌ள்ளவ‌ர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. இதில் 4 பேர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே பலியானார்கள். தாக்குதலுக்கு பின்னர், அங்கிருந்த 5 பேரை காணவில்லை. அவர்களை மர்ம கும்பல் கடத்திச் சென்று இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்