ஆப்கானிஸ்தான் அமைச்சரவை மாற்றம்: ஐ.நா. வரவேற்பு!

திங்கள், 13 அக்டோபர் 2008 (12:55 IST)
ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்சாய் தலைமையிலான அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை அந்நாட்டில் உள்ள ஐ.நா. மூத்த அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து ஐ.நா.வின் மூத்த அதிகாரி கை-எய்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரீஸ் நகரில் கடந்த ஜூனில் நடந்த கூட்டத்தில் ஆப்கானிஸ்தானின் காவல்துறை மற்றும் விவசாய உற்பத்தியை பலப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அதனை நிறைவேற்றும் வகையில் தற்போதைய அமைச்சரவை மாற்றங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக உள்ளதாகவும் தனது அறிக்கையில் எய்டி உறுதி கூறியுள்ளார்.

மொத்தம் 26 அமைச்சர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில், உள்துறை, கல்வி, விவசாயம், அகதிகள் மற்றும் பாராளுமன்ற விவகாரம் ஆகிய 5 துறைகளுக்கான அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்