நிலையற்ற பாகிஸ்தான் உலகிற்கு பெரும் அச்சுறுத்தல்: பிடென்!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (14:03 IST)
பாகிஸ்தானின் நிலையற்ற செயல்பாடு உலகிற்கு பெறும் அச்சுறுத்தலை விளைவிக்கும் என அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் ஜான் பிடென் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் குடியரசு, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர்களான மெக்கெய்ன், ஒபாமா இடையிலான முதல் நேரடி விவாதம் கடந்த வாரம் நடந்தது.

இதையடுத்து இரு கட்சிகளின் துணை அதிபர் வேட்பாளர்களான ஜான் பிடென் (ஜனநாயக கட்சி), சாரா பாலின் (குடியரசுக் கட்சி) ஆகியோர் இடையே மிசோரியின் செயின்ட் லூயிஸ் பகுதியில் இன்று நேரடி விவாதம் நடந்தது.

தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த விவாதத்தில் பேசிய பிடென், அமெரிக்கா அடுத்து சந்திக்கும் பயங்கரவாத தாக்குதல் அல்கய்டா நடத்துவதாக இருக்கும். இதற்காக ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் அவர்கள் திட்டம் தீட்டி வருகின்றனர் என்றார்.

அணு ஆயுதம் கொண்ட ஈரான் அல்லது நிலையற்ற பாகிஸ்தான், இதில் எது ஆபத்தானது என்ற கேள்விக்கு, இரண்டுமே ஆபத்தை விளைக்கக் கூடியவைதான் என்று பிடென் பதிலளித்தார்.

இதுபற்றி மேலும் அவர் பேசுகையில், பாகிஸ்தானிடம் ஏற்கனவே அணு ஆயுதம் உள்ளது. அதனை அந்நாடு பலமுறை சோதித்தும் பார்த்துள்ளது. இஸ்ரேல், மத்திய தரைக்கடல் நாடுகளை தாக்கும் வல்லமை பாகிஸ்தான் அணு ஆயுதங்களுக்கு உள்ளது.

அதேவேளையில் ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் அது நிலையற்ற பாதுகாப்புத் தன்மையை உருவாக்கிவிடும் என்பதால் அதுவும் அபாயகரமானதே என்று பிடென் விவாதித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்