இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையில் விமானப் போக்குவரத்து உடன்பாடு கையெழுத்து!
திங்கள், 29 செப்டம்பர் 2008 (20:11 IST)
இந்தியத் துணைக் கண்டத்திற்கும் ஐரோப்பா கண்டத்திற்கும் இடையில் பயணிகள் விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதற்குள்ள சட்டரீதியான தடைகளை நீக்குவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் கையெழுத்திட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கும் மூன்றாவது உலக நாடுகளுக்கும் இடையில் பயணிகள் விமானப் போக்குவரத்து தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்ற ஐரோப்பிய நாடுகளின் விமானச் சேவை விதிகளுக்கு எதிரானது என்று கடந்த 2002 இல் ஐரோப்பிய நீதிமன்றம் முடிவு செய்து அறிவித்தது. இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை அதிகரிப்பதில் பல்வேறு சட்டரீதியான தடைகள் உருவாகின.
இந்தத் தடைகளைக் களையும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றுடனும் இந்தியா தனித்தனியாக உடன்பாடு செய்துகொள்ளும் வகையில் பயணிகள் விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.
தனித்தனியாக 26 உடன்பாடுகள் கொண்ட இந்த ஒப்பந்தத்தில், பிரான்சில் நடந்த ஒன்பதாவது இந்தியா- ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டின் இறுதி நாளான நேற்று இரவு கையெழுத்திடப்பட்டது. இந்தியா சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதர் ஜெ.பகவதி, ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பிரான்ஸ் நாட்டுத் துறைமுக நகரமான மார்செய்ல்லெஸ்-இல் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரான்ஸ் அதிபரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சிமுறை தலைவர் பதவியில் தற்போது உள்ளவருமான நிகோலஸ் சர்கோஸியும் சந்திப்பதற்கு சற்று முன்பு இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்துச் சேவை எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றி இந்த ஒப்பந்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், இரண்டு கண்டங்களுக்கும் இடையில் போக்குவரத்தை அதிகரிப்பதற்கு விமான நிறுவனங்களைத் தூண்டுவதாக இந்த ஒப்பந்தம் இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இனி ஐரோப்பாவில் நிறைய இடங்களுக்கு விமான சேவைகளை வழங்க முடியும் என்று ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிசர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.