வியட்நாமில் வெள்ளம்: பலி 41 ஆக உயர்வு!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (18:00 IST)
வியட்நாமின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்கிய ஹகுபிட் சூறாவளிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்த சூறாவளியால் குறைந்தது 65 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

ஹகுபிட் சூறாவளியால் அந்நாட்டின் பல இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் 10 ஆயிரம் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு புயல் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டு குழு கூறியுள்ளது.

சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட சோன்-லா மாகாணத்தில் நேற்று 2 உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேர் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளத்தின் சீற்றத்தில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டதாலும், பாலங்கள் மூழ்கியதாலும், நாட்டின் பெரும்பாலான இடங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீட்புப் பணி மேற்கொள்ளும் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடந்து சென்று நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

சாலைப் போக்குவரத்து சீராகாத பல கிராமங்களுக்கு உணவுப் பொருட்களை வினியோகிக்க முடியாத காரணத்தால் அங்குள்ள மக்கள் பட்டினியால் வாடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்