அண்மைக்காலமாக இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆலோசனை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அதிபர் புஷ்ஷுக்கு அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையத்தின் தலைவர் பெலிஸ் டி.கெய்ர் எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, அமெரிக்க அரசு வலியுறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரிஸாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துள்ள தாக்குதல்களை சுட்டிக்காட்டியுள்ள பெலிஸ் கெய்ர், அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு வழிவகை செய்ய மன்மோகன் சிங் அரசு உறுதிகொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரிசா வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு இந்திய அரசு இன்னும் உத்தரவிடவில்லை என்பதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள பெலிஸ் கெய்ர், இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய சூழல் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில், இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சிறுபான்மையினர் தாக்கப்படுவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிபர் புஷ் கவலை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.