அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி: இந்திய-அமெரிக்க அமைப்பு முயற்சி!
சனி, 20 செப்டம்பர் 2008 (18:43 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு நடப்புக் கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான முயற்சியில், ஜனநாயகக் கட்சியின் இந்திய-அமெரிக்க அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரும் 26ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்ததிற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த பின்னர் ஜனநாயக கட்சி இந்திய-அமெரிக்க அமைப்பின் தலைவர் சன்த் சிங் சத்வால் செய்தியாளர்களிடம் பேசினார்.
முன்னணி வங்கிகளில் ஏற்பட்டுள்ள சரிவால் உலக பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க நாடாளுமன்றம் கூடுதல் கவனம் செலுத்தி வரும் சமயத்தில், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பத்திற்கு ஒப்புதல் பெறும் விஷயத்தை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு நினைவுபடுத்த தாங்கள் கடமைப்பட்டு உள்ளோம் என்றார்.
தங்களின் (இந்திய-அமெரிக்க) அமைப்பிற்கு ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் ஆதரவு பாரம்பரியமாக உண்டு என்றாலும், செப்டம்பர் 26ஆம் தேதிக்குள் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி பெறும் நோக்கில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களிடமும் தாங்கள் ஆதரவு கோரி வருவதாகவும் கூறினார்.
அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜனநாயக கட்சிக்கு பல மில்லியன் டாலர் வழங்கியுள்ள இந்திய-அமெரிக்க அமைப்பு, கடந்த 2005 ஜூலையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், அதிபர் ஜார்ஜ் புஷ் இடையே அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான பேச்சுகள் துவங்கியது முதலே அதனை நிறைவேற்ற இந்த அமைப்பு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சன்த் சிங் சத்வால் தலைமையிலான குழு கடந்த 2 வாரங்களில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோஸி, செனட் சபையின் அயலுறவு விவகாரக் குழுவின் தலைவர் ஜோசப் பைடென், ஹிலாரி கிளிண்டன், கேரி அக்கெர்மென், ஜோசப் க்ரோவ்லி, சர்லஸ் ஸ்சூமர் உள்ளிட்டவர்களை சந்தித்து இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த்திற்கு வரும் 26ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.