இந்தியாவிற்கு தடையற்ற அணு எரிபொருள் வினியோகம்: வில்லியம் பர்ன்ஸ்!
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (14:05 IST)
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு தடையற்ற அணு (யுரேனியம்) எரிபொருள் வினியோகம் செய்யப்படும் என்றும், இதில் இடையூறு ஏற்பட்டால் அதனை சீர்செய்ய அமெரிக்க அரசு தேவையான முயற்சிகளை எடுக்கும் என்றும் அந்நாட்டு துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் (சென்ட்) அயலுறவுக் குழு இந்தியாவுக்கு அணு எரிபொருள் வழங்குவது குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் வில்லியம் பர்ன்ஸிடம் விளக்கமளித்துள்ளார்.
இதற்கிடையில், 123 ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தடையற்ற அணு எரிபொருள் வினியோக உறுதிமொழி அமெரிக்க சட்டத்திற்கு எந்த வகையில் உட்பட்டது? அப்படி அந்த உறுதிமொழி அமெரிக்க சட்டத்திற்கு உட்படாதது என்றால், ஏன் அதனை 123 ஒப்பந்தத்தில் குறிப்பிட்டீர்கள்? தங்களுடைய அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருள் இருப்பை (Strategic Reserve) உருவாக்குவது என்ற இந்தியாவின் நிலைக்கு உங்களின் பதிலென்ன? சட்டத்திற்கு உட்படாத உறுதிமொழியை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறதா? என செனட் குழுவின் (பொறுப்பு) தலைவரான கிரிஸ் டோட் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்துள்ள பர்ன்ஸ், இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவதில் வணிகச் சிக்கல்கள் (அதாவது யுரேனியம் வழங்கும் அமெரிக்க நிறுவனம் இந்தியாவின் தேவையை நிறைவு செய்ய முடியாமல் போனால்) உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்பட்டால் அதனை சமாளிக்கவும், தொடர்ந்து இந்தியாவுக்கு யுரேனியம் வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் எனக் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவாதங்கள் அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி புதிதாக பொறுபேற்கும் அமெரிக்க அரசையும் கட்டுப்படுத்துமா என்ற கேள்விக்கு, அமெரிக்க சட்டத்தின் படி அந்த உத்தரவாதங்களை முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும், அடுத்துவரும் அமெரிக்க அதிபரும் நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர் என்பதால் இப்பிரச்சனையில் அமெரிக்காவின் நிலையை இந்திய அரசு உணரும் என தாம் நம்புவதாகவும் பதிலளித்துள்ளார்.