அணு சக்தி ஒப்பந்தத்திற்கு அனுமதி: யு.எஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்!

புதன், 17 செப்டம்பர் 2008 (15:11 IST)
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு விரைவில் அனுமதி வழங்க ஒத்துழைக்க வேண்டும் என கட்சிப் பாகுபாடின்றி சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சக உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டம் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி நிறைவடைவதற்குள், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கக் ஒத்துழைக்க வேண்டும் என குடியரசு, ஜனநாயக கட்சிகளைச் சேர்ந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அந்நாட்டின் 435 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தத்திற்கு பன்னாட்டு அணுசக்தி முகமை (IAEA) அனுமதி வழங்கியுள்ளது. இதனை நடைமுறைபடுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் வலுப்படும் என்றும், இந்தியா போன்ற மாபெரும் ஜனநாயக நாட்டுக்கு தேவையான மின்சக்தியையும் பூர்த்தி செய்ய முடியும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதற்கு உரிய காலத்தில் அனுமதி வழங்குவதன் மூலமே இரு நாடுகளும் பயனடைய முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கேரி அகெர்மென், ஜோசக் க்ரோலி, ப்ரான்க் பல்லோன் மற்றும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோ வில்சன், எட்வர்ட் ரோய்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்