புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நேபாள அரசு, எந்த ஒரு சூழ்நிலையிலும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என வன்மையாக கண்டித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அயலுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுடெல்லியின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடித்ததால் ஏராளமானோர் உயிர் மற்றும் உடமைகளை இழந்துள்ளது நேபாள அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், இதனை எந்தச் சூழலிலும் அவர்கள் நியாயப்படுத்த முடியாது என்றும், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் நேபாள அரசு கூறியுள்ளது.
புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று மக்கள் அதிகம் கூடும் 5 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 24 பேர் உயிரிழந்தனர்.