அமெரிக்காவில் பலியான இந்திய மாணவியின் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை!
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (12:31 IST)
அமெரிக்காவில் மர்ம மனிதரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவியின் உடலை இந்தியா கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்த வருத்தம் அளிக்கக்கூடிய நிலையை இந்திய தூதரகம் உணர்ந்துள்ளது. பலியான மாணவியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு சிகாகோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
பலியான மாணவியின் சகோதரி, பல்கலைக் கழகம் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுடனும் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவில் மருத்துவப் பட்ட மேற்படிப்பு படித்து வந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சவும்யா ரெட்டி என்ற மாணவி கடந்த சனிக்கிழமையன்று சிகாகோ நகரில் மர்ம மனிதரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல், ஆந்திராவில் இருந்து அமெரிக்கா சென்று பலியானவர்களில் சவும்யா ரெட்டி 4-வது மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் கரீம் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்ற முதுகலை மருத்துவ மாணவரும், 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லூசியானா பல்கலைக் கழகத்தில், கிரண்குமார் மற்றும் சந்திரசேகர் ரெட்டி என்ற 2 ஆராய்ச்சி மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.