அமெரிக்க ராணுவம் தாக்குதல்: பாக்.கில் 10 பேர் பலி!
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (13:51 IST)
அமெரிக்க ராணுவ விமானங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வசிரிஸ்தான் மாகாணத்தின் வடக்கு பகுதியில் அல்-கய்டா தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், மிரன்ஷா என்ற நகருக்கு அருகே இன்று காலை அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கூறுகையில், அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது உண்மைதான். 10க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.
இதற்கிடையில், ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான டூல் கெய்ல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், 2 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தலிபான் மற்றும் அல்-கய்டா தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதாக அறிவித்துள்ள அமெரிக்க ராணுவம், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பாகிஸ்தான் பகுதியில் நேற்று முதல் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி பர்வேஸ் கயானி கடும் நேற்றே கண்டனம் தெரிவித்திருந்தார்.