அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் புஷ் விடுத்த அழைப்பு ஏற்று செப்டம்பர் 25ஆம் தேதி வெள்ளை மாளிகைக்கு செல்லும் பிரதமர் மன்மோகன்சிங், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதற்கு முன்பாக அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்லும் மன்மோகன் சிங் அந்த பயணத்தின் போதே வாஷிங்டனுக்கும் சென்று புஷ்ஷை சந்திக்க உள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள உறவு அதிமுக்கிய கூட்டாளி உறவாக வலுப்பெற வேண்டும் என்பதில் புஷ்ஷுக்கு அதிக விருப்பம் உள்ளதாகவும், விவசாயம், கல்வி, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட இதர துறைகளிலும் இந்தியாவுடனான ஒத்துழைப்பு வலுப்பெற வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தருவதை மகிழ்ச்சி மிக்கதாக புஷ் கருதுகிறார் என அதிபர் மாளிகை செய்தித்துறை செயலர் டானா பெரினோ தனது அறிக்கை தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சுமுகமாக நிறைவேற வேண்டும் என்பதில் புஷ் அதிக கவனம் காட்டிவருவதாகவும், அதிகரித்து வரும் இந்தியாவின் மின்தேவை இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக செய்யப்படும் என பெரினோ கூறியுள்ளார்.