பிரதமர், பிரணாப் உடன் சீன அயலுறவு அமைச்சர் இன்று சந்திப்பு!

திங்கள், 8 செப்டம்பர் 2008 (13:48 IST)
இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி, பிரதமர் மன்மோகன்சிங், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை இன்று சந்தித்துப் பேசுகிறார்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த‌த்திற்கு அனுமதி பெறுவதற்காக வியன்னாவில் நடந்த கூட்டத்தில், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா மேற்கொண்டதற்கு, சீன அயலுறவு அமைச்சருடனான சந்திப்பின் போது இந்தியா தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளியன்று வியன்னாவில் இருந்து கிடைத்த தகவலின் படி, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒ‌த்துழை‌ப்பு ஒப்பந்தத்திற்கு என்.எஸ்.ஜி நாடுகள் அளிக்க முன்வந்த சிறப்பு விலக்கை தடுக்க சீனா நடவடிக்கை மேற்கொண்டதாகவும், எனினும், சனிக்கிழமை சீனாவின் எதிர்ப்பையும் மீறி விலக்கு பெறப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்த‌த்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சீனா ஆதரவாக இருக்கும் என சீன அதிபர் ஹூ ஜின்டாவோ, பிரதமர் வென் ஜியாபாவோ இருவரும் மன்மோகனிடன் ஏற்கனவே உறுதியளித்திருந்த நிலையில், வியன்னா கூட்டத்தில் சீனாவின் நேர்மறையான நிலைப்பாடு ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்