எகிப்து: பாறைகள் சரிந்து விழுந்ததில் 18 பேர் பலி!

சனி, 6 செப்டம்பர் 2008 (18:43 IST)
எகிப்தில் தலைநகர் கெய்ரோவின் அருகே உள்ள புறநகர்ப் பகுதியான ஷான்டியில், ராட்சத பாறைகள் உருண்டு குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

ஷான்டியின் முகுட்டம் மலைச்சரிவின் அடிவாரத்தில் அமைந்துள்ள பெக்கெய்ட் கிராமத்து வீடுகள் மீது, குறைந்தது 8 ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததாகவும், அவை ஒவ்வொன்றும் சுமார் 70 டன் எடையுள்ளவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பெக்கெய்ட் கிராமத்தில் உள்ள 50 வீடுகள் மண்ணில் புதைந்ததாகவும், 22 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பாறைக்கு அடியில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

கடந்த 1993ஆம் ஆண்டு இதே பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்