கிலானி கார் மீது துப்பாக்கிச்சூடு: தலிபான்கள் பொறுப்பேற்பு!
வியாழன், 4 செப்டம்பர் 2008 (11:45 IST)
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு அந்நாட்டு தலிபான் தீவிரவாதிகள் பொறுபேற்பதாக அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசால் கடந்த வாரம் தடை செய்யப்பட்ட அம்பர்லா தீவிரவாத இயக்கத்தின் பேச்சாளர் முஸ்லிம்கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், கிலானி கார் மீதான துப்பாக்கிச்சூட்டை தலிபான் தீவிரவாதிகளே நடத்தினர் எனக் கூறினார்.
எதிர்காலத்தில் அரசு தலைவர்கள் மீது இதுபோன்ற மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
ராவல்பிண்டியில் உள்ள சக்லாலா விமானத் தளத்திற்குச் சென்றுவிட்டு நேற்று இஸ்லாமாபாத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த பிரதமர் யூசுப் ரசா கிலானியின் வாகன அணிவகுப்பின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
எனினும் இதில் பிரதமர் கிலானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.