பாக். அரசு முழு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாது: நவாஸ்!
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (15:54 IST)
கூட்டணிக் கட்சிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறுவதுடன், மக்கள் பிரச்சனைகள் மெத்தனமாக இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணி இதே போக்கை தொடர்ந்தால் பாகிஸ்தான் அரசு தனது முழு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாது என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் பாகிஸ்தான் அரசை கவிழ்க்கும் நடவடிக்கையில் தாம் ஒருபோதும் ஈடுபட மாட்டேன் என்றாலும், அரசின் கொள்கைகள் மற்றும் தலைவர்கள் மீது மக்களின் அதிருப்தி அதிகரித்து வருவதால் பாகிஸ்தான் அரசு தனது முழு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாது என தாம் நம்புவதாக கூறினார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சிக் கூட்டணியில் உங்கள் (பாகிஸ்தான் முஸ்லிம் லீக்) கட்சி மீண்டும் இணையுமா என்ற கேள்விக்கு, அந்த எல்லையை ஏற்கனவே கடந்து விட்டதால், மீண்டும் ஆளும் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக பதிலளித்தார்.
செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தல் யார் வெற்றி பெறுவார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தேர்தல் முடியும் வரை பொறுத்திருந்து பார்ப்பது தான் பொருத்தமாக இருக்கும், முடிவு வெளியாவதற்கு முன்பே யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கூறுவது சரியாக இருக்காது என்று கூறினார்.