உலகின் 2வது பெரிய பொருளாதாரம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ஜப்பானின் பொருளாதாரம் தொடர்ந்து நலிவடைந்ததற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியில் இருந்து யசுவோ புகுடா விலகியுள்ளார்.
டோக்கியோவில் உள்ள தனது இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தனது ராஜினாமா முடிவை வெளியிட்ட அவர், புதிய தலைமையின் கீழ் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தை தமது கட்சி எதிர்கொள்ளும் என்றார்.
தமது கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த புதிய தலைமைக்குழு தேவை என்றும், ராஜினாமா செய்ய இதுவே ஏற்ற தருணம் என்றும் புகுடா அப்போது குறிப்பிட்டார்.
நாட்டின் வளர்ச்சிக்கு எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போடுவதால், தமது எல்.டி.பி. (Liberal Democratic Party- LDP) அரசின் திட்டங்களை நிறைவேற்ற கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக குற்றம்சாட்டிய புகுடா, ஜப்பான் மக்களின் நலன் கருதி எதிர்க்கட்சியினர் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடந்தாண்டு மேல்சபையில் பெரும்பான்மை பெற்றதைத் தொடர்ந்து, புகுடா அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.