அதிபர் பதவிக்கு போட்டியிட பி.பி.பி-க்கு உரிமையுண்டு: ஜர்தாரி!
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (11:53 IST)
பாகிஸ்தானில் தனிப்பெரும் அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு (பி.பி.பி) அதிபர் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளதாக அக்கட்சியின் இணை தலைவரும், அதிபர் வேட்பாளருமான ஆசிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.
அதிபர் தேர்தலில் ஜர்தாரியை வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறிய நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, இரு கட்சிகளும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி கட்சி மனப்பான்மை இல்லாதவரையே அதிபர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதையும் பி.பி.பி. மீறி விட்டதாக குற்றம்சாட்டினார்.
இதற்கிடையில், பிரதமர் இல்லத்தில் நேற்றிரவு நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய ஜர்தாரி, பாகிஸ்தானின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள பி.பி.பி-க்கு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதியும் உள்ளது எனக் கூறினார்.
முக்கிய அரசியல் கட்சிகளான முத்தஹிதா குவாமி இயக்கம், அவாமி தேசிய கட்சி, பலூச் குழு உள்ளிட்டவை பி.பி.பி கட்சி வேட்பாளரை ஆதரிப்பதால், அதிபர் தேர்தலில் பி.பி.பி. வெற்றி பெறுவது நிச்சயம் என்றார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் புதிய பிரதமர், சபாநாயகரை நியமிக்கும் பணி பி.பி.பி-க்கு முதல் சவாலாக இருந்தது. அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டோம். தற்போது 2வது சவாலாக அதிபரை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. இதனையும் பி.பி.பி. வெற்றிகரமாக நிறைவேற்றும் என்று ஜர்தாரி உறுதிபடக் கூறினார்.