இலங்கையில் கடும் மோதல்: 54 படையினர் பலி!
திங்கள், 1 செப்டம்பர் 2008 (15:28 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 54 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியா, பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் நேற்று சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட மும்முனைத் தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர எதிர்த்தாக்குதல்களில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 படையினர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதல் தொடர்ந்து நடந்து வருவதாகப் புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள சிறிலங்கச் சிறப்பு அதிரடிப் படையினருக்கு எதிராக நேற்று விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில், சிறிலங்கப் படை அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேபோல வன்னேரி என்ற இடத்தைச் சுற்றிவளைப்பதற்காக சிறிலங்கப் படையினர் கடந்த 4 நாட்களாக மேற்கொண்டு வரும் முயற்சிகள் விடுதலைப் புலிகளால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பகுதியில் கடந்த 27,28,29,30 ஆகிய நான்கு நாட்களில் சிறிலங்க படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடும் மோதலில், 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.
துணுக்காய் ஆலங்குளத்தில் சிறிலங்கப் படையினரின் முன்நகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 25க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை நடந்துள்ள இந்த மோதலில், பலியான படையினரின் சடலங்களையும் ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர் என்று புதினம் இணைய தளம் கூறுகிறது.