இந்திய தூதரக தாக்குதலில் ஐ.எஸ்.ஐ-க்கு தொடர்பில்லை: ஜர்தாரி!

வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (13:42 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு எந்தத் தொடர்பும் இல்லை என அந்நாட்டு அதிபர் வேட்பாளரான ஆசிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ((பி.பி.பி) கூட்டணியில் இருந்து நவாஸ் ஷெரீப் விலகுவதற்கு முன்னர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஜர்தாரி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில், கடந்த ஜூலையில் காபூல் இந்திய தூதரகத்திற்கு அருகே நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 4 இந்தியர்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சதியில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு தொடர்பிருப்பதாக ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியிருந்தன.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, காபூல் தூதரக தாக்குதலில் ஐ.எஸ்.ஐ-க்கு தொடர்பு இல்லை என ஜர்தாரி திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முஷாரஃப் வெளியேறத் தேவையில்லை: அதிபர் பதவியில் இருந்து விலகிய முஷாரஃப் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதை தாம் விரும்பபில்லை என்றும், மாறாக அவர் தாய்நாட்டிலேயே தொடர்ந்து தங்கியிருந்து பாகிஸ்தானின் வளமான வளர்ச்சியை காண வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் ஜர்தாரி குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்