பாகிஸ்தான் தனது மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும்: இந்தியா!
சனி, 2 ஆகஸ்ட் 2008 (17:17 IST)
பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்றும், இருதரப்பு நல்லுறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பயங்கரவாதம் இல்லாத சூழலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
"பாகிஸ்தானில் மையம்கொண்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டுவோம் என்று அந்நாட்டு அரசு எடுத்துள்ள உறுதி நடைமுறைக்கு வருவதைப் பார்க்க விரும்புகிறோம்" என்று பிரதமர் மன்மோகன் சிங் சிறிலங்க ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
"பாகிஸ்தானுடன் அமைதியான, நட்புரீதியான, ஒத்துழைப்புடன் கூடிய உறவுகள் அமைக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஜம்மு- காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட எல்லா நீண்ட காலப் பிரச்சனைகளையும் இருதரப்புப் பேச்சின் மூலம் தீர்ப்பது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இருந்தாலும், இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகள் மேம்படுவதற்கு பயங்கரவாதம் அற்ற சூழல் தேவைப்படுகிறது. எங்கள் மக்கள் பாதுகாப்பான சூழலில் முன்னேற்றம் காண்பதையும், அவர்கள் சகோதர உணர்வுடன் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது." என்று மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் உடனான நல்லுறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தனது அரசு ஏற்படுத்தியுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் உள்ள இடைவெளிகளை நிரப்பி பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.