சார்க் அயலுறவு அமைச்சர்கள் கூட்ட‌ம்- பிரணாப் ப‌ங்கே‌ற்பு!

வியாழன், 31 ஜூலை 2008 (16:49 IST)
சார்க் மாநாட்டு நிகழ்ச்சிகளை நிறைவு செய்வதற்காக, கொழும்பில் இன்று துவ‌ங்‌கிய சார்க் அயலுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியா சார்பில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றுள்ளார்.

மொத்தம் 2 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில், வரும் ஆகஸ்ட் 2, 3ஆம் தேதிகளில் நடைபெறும் சார்க் மாநாட்டு நிகழ்ச்சிகள் இறுதி செய்யப்படும். ஆனால் இக்கூட்டத்தில் நிகழ்ச்சிகளை இறுதி செய்த பின்னர் பயங்கரவாத தாக்குதல்களை சார்க் நாடுகள் எதிர்கொள்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவு உள்ளிட்ட 8 நாடுகளின் அயலுறவு அமைச்சர்கள் பங்கேற்றுள்ள இக்கூட்டம் நாளை நிறைவடைகிறது.

இதற்கிடையில், ச‌ி‌றில‌ங்கா ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், மீனவர்களின் பாதுகாப்பு குறித்து ஆக‌ஸ்‌ட் 2ஆ‌ம் தே‌தி துவ‌ங்கு‌ம் சார்க் மாநாட்டில் ப‌ங்கே‌ற்கு‌ம் பிரதமர் மன்மோகன்சிங் இது தொட‌ர்பாக வலியுறுத்துவார் என டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அயலுறவு செயலாளர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்