மைனாரிட்டி அரசாக இருந்தாலும் சரி, ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம்: அமெரிக்கா!

திங்கள், 21 ஜூலை 2008 (21:00 IST)
இந்தியாவில் எந்த அரசாக இருந்தாலும் சரி, அது பெரும்பான்மை அற்ற அரசாக ஆனாலும், அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவுத் துறையின் தெற்கு, மேற்கு ஆசிய விவகாரங்களுக்கானத் துணைச் செயலர் ரிச்சர்ட் பெளச்சர், “மைனாரிட்டி அரசுகளுடன் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்காவிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. உலகின் பல நாடுகளில் மைனாரிட்டி அரசுகள் உள்ளனவே” என்று கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றால் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை எப்படி நிறைவேற்றுவீர்கள் என்று கேட்டதற்கு, “அது குறித்து எதையும் கூற முடியாது, அடுத்த தேர்தல் நடந்து முடியும் வரை நிறுத்துங்கள் என்றோ அல்லது வேறொரு கூட்டாட்சி ஏற்படும் வரை பொறுத்திருங்கள் என்றோ கூறுவதற்கில்லை. அங்கு ஒரு அரசு இருந்தால் அதோடு இணைந்து செயலாற்றுவோம்” என்று பதிலளித்த ரிச்சர்ட் பெளச்சர், “அரசமைப்பு ரீதியாக அமைந்த அரசுடன் - யார் ஆட்சியில் உள்ளார்களோ அவர்களுடன் - ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அவர்களோடு இணைந்து அதை நிறைவேற்றுவோம். எந்த அரசு என்பதல்ல, இந்தியர்களுடனும், காங்கிரஸூடனும் (அமெரிக்க நாடாளுமன்றம்) இணைந்து நிறைவேற்றுவோம். அதற்கு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வோம்” என்று கூறியுள்ளார்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு நடத்திய குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் ரிச்சர்ட் பெளச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்