நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ்!

திங்கள், 21 ஜூலை 2008 (17:24 IST)
நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராக நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் பரன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மாவோயிஸ்ட் வேட்பாளரை விட 28 வாக்குகள் கூடுதலாகப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். இது அந்நாட்டு பிரதான அரசியல் கட்சியான மாவோயிஸ்ட்-க்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

நேபாள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அந்நாட்டின் தற்போதைய பிரதமருமான கிரிஜா பிரசாத் கொய்ராலாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏற்க முடியாது என மாவோயிஸ்ட் அறிவித்ததால், ராம் பரன் யாதவ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து மாவோயிஸ்ட் கட்சியின் சார்பில் ராம் ராஜா பிரசாத் சிங் போட்டியிட்டார்.

கடந்த 19ஆம் தேதி நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த முடிவும் தெரியாத நிலையில், இன்று அந்நாட்டின் சிறிய கட்சிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தன.

இன்று மாலையில் முடிவடைந்த தேர்தலைத் தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில், ராம் பரன் யாதவ் 308 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராம் ராஜா பிரசாத் சிங் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 282 என்று முதலில் அறிவிக்கப்பட்டாலும், அவற்றில் 2 வாக்குகள் செல்லாதவை என பின்னர் அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய-நேபாள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தனுஷா மாவட்டத்தின் ஷபாய் கிராமத்தில் விவசாயி மகனாகப் பிறந்த ராம் பரன் யாதவ், கொல்கட்டாவில் தனது டாக்டர் படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்