கண்காணிப்பு வரைவு: ஐ.ஏ.இ.ஏ., என்.எஸ்.ஜி.க்கு விளக்கினார் சிவ் சங்கர் மேனன்!

சனி, 19 ஜூலை 2008 (10:09 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த பன்னாட்டு அணு சக்தி முகமையின் (IAEA) ஒப்புதலுக்காக உருவாக்கப்பட்டுள்ள கண்காணிப்பு வரைவு ஒப்பந்தத்தை அவ்வமைப்பின் ஆளுநர்களுக்கு இந்திய அயலுறவுச் செயலாளர் சிங் சங்கர் மேனன் விளக்கினார்.

வியன்னா நகரிலுள்ள பன்னாட்டு அணு சக்தி முகமையின் அலுவலகத்தில் நடந்த இந்த விளக்கக் கூட்டத்தில் அணு சக்தி தொழில்நுட்ப வணிக்க் குழுவில் (Nuclear Suppliers’ Group) இடம்பெற்றுள்ள நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

பன்னாட்டு அணு சக்தி முகமையின் கண்காணிப்பு வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விவரங்களின் மீது அதன் ஆளுநர்கள் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கெல்லாம் சிவ் சங்கர் மேனன் பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.

அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடாக இருந்தாலும், அணு ஆயுத பரவல் தடுப்பில் இந்தியா ஆற்றிலுள்ள பங்கை மேனன் விளக்கியுள்ளார்.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷூம் கையெழுத்திட்டு 2005ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி டெல்லியில் கூட்டறிக்கை வெளியிட்டனர். சரியாக 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வரைவு ஒப்புலுக்காக பன்னாட்டு அணு சக்தி முகமையில் விளக்கப்பட்டுள்ளது.

இந்தியா அளித்துள்ள இந்த கண்காணிப்பு வரைவிற்கு ஐ.ஏ.இ.ஏ. ஒப்புதல் அளித்தால் அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் ஒரு முக்கிய நகர்வாகும். இந்த ஒப்புதலிற்குப் பிறகே இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பை மேற்கொள்வது குறித்து அணு சக்தி தொழில்நுட்பக் குழு இறுதி முடிவு செய்யும். அந்த பொறுப்பை இந்தியாவிற்காக அமெரிக்க ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்களாக உள்ள 35 பேரில் 19 பேர் அணு சக்தி தொழில்நுட்ப வணிக்க் குழுவிலும் உறுப்பினர்களாக உள்ளவர்கள். இவர்கள் தவிர மேலும் 19 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த ஆய்வில் கலந்துகொண்டுள்ளனர். பன்னாட்டு அணு சக்தி முகமையின் மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 140 என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த விளக்கக் கூட்டத்திற்கு முன்னர் ஐ.ஏ.இ.ஏ.யின் தலைவர் எல் பராடீயை சந்தித்து ஒப்பந்த வரைவு குறித்து சிவ் சங்கர் மேனன் விளக்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்