எரிவாயு குழாய்: இந்தியா- பாக். இடையிலான எல்லா சிக்கல்களும் தீர்ந்து விட்டன!
வெள்ளி, 27 ஜூன் 2008 (18:50 IST)
ஈரானில் இருந்து அமைக்கப்பட உள்ள 7.4 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிவாயுக் குழாய்த் திட்டத்தில் தங்களிடையிலான இருதரப்பு வர்த்தகச் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாக இந்தியாவும் பாகிஸ்தானும் தெரிவித்துள்ளன.
எரிவாயு விலை மறுபரிசீலனை பற்றிய ஈரானின் கோரிக்கை தொடர்பாக இணைந்து பேசுவது என்றும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
"எரிவாயு குழாய்த் திட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான இரு தரப்பு வர்த்தகச் சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டது பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். இனி தீர்க்கப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்று இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, புது டெல்லியில் இன்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
தங்கள் நாட்டின் வழியாக எரிவாயு கொண்டு வருவதற்கு பாகிஸ்தான் கேட்ட கட்டணம் தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்ததால், 2007 ஆகஸ்ட் முதல் ஈரான்- இந்தியா- பாகிஸ்தான் எரிவாயுக் குழாய்த் திட்டம் பற்றிய பேச்சுக்களை இந்தியா புறக்கணித்து வந்தது.
இரு நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடு ஏப்ரல் மாதம் இஸ்லாமாபாத்தில் நடந்த பெட்ரோலிய அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்க்கப்பட்டு விட்டது. "போக்குவரத்துக் கட்டணம் ஒரு சிறிய விவகாரம். அக்கட்டணக் கொள்கைகள் தொடர்பாக நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளோம். இத்திட்டத்தில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது" என்று அமைச்சர் முரளி தியோரா கூறினார்.
மூன்று நாடுகளும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டதற்கு மாறான கட்டண மறுபரிசீலனை விதிகளை ஈரான் புகுத்துவது தொடர்பாக, ஜூலை 1ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சகச் செயலர்கள் மேட்ரிட் நகரில் கூடிப் பேசவுள்ளனர்.
இந்தப் புதிய விதிமுறைகளை இருநாடுகளும் எதிர்த்து வரும் நிலையில், அடுத்த மாதம் டெஹ்ரானில் நடக்கவுள்ள முத்தரப்புக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வழியாக எரிவாயுவைக் கொண்டு வருவதில் உள்ள சிக்கலைக் கலைவதற்காக ஈரான் பரிந்துரைத்தபடி, ஈரான்- பாகிஸ்தான் எல்லை வழியாக அல்லாமல் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக எரிவாயுவை ஒப்படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வழியாக வரும் எரிவாயுக் குழாய்க்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றார் குரேஷி.