அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஜான் மெக்கெய்ன் ஆதரவு!
புதன், 28 மே 2008 (17:42 IST)
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுடன் நல்லுறவு மேம்படும் என்ற அடிப்படையில் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை தான் ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் கூறியுள்ளார்.
கொலரடோவில் உள்ள டென்வர் பல்கலைக்கழகத்தில் முக்கிய அயலுறவுக் கொள்கைகள் தொடர்பாகப் பேசிய ஜான் மெக்கெய்ன், "உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுடன் நல்லுறவு மேம்படும் என்ற வகையில் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நான் ஆதரிக்கிறேன். இதனால் அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் இன்னும் வலுப்பெறும்" என்றார்.
அணு ஆயுதங்கள், அணு எரிபொருள் ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் அமெரிக்கா தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட மெக்கெய்ன், அணு ஆயுதப் பரவலைத் தடுத்து அணு ஆயுதப் போரைத் தவிர்க்க அமெரிக்கா முயற்சிக்கும் என்றார்.
மேலும், அணு ஆயுதங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்துடன், அணு எரிபொருள் உற்பத்தியை நிறுத்துமாறு சீனாவைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், ரஷ்யாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜான் மெக்கெய்ன் கூறியுள்ள கருத்துக்களால், அமெரிக்காவில் ஒருவேளை மீண்டும் ஜார்ஜ் புஷ் ஆட்சி அமைந்தால் இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக முயற்சிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.