அரிசித் தட்டுப்பாடு இந்திய உதவி நாடும் சவுதி!

செவ்வாய், 20 மே 2008 (12:26 IST)
உலகின் முன்னணி அரிசி இறக்குமதி நாடான சவுதி அரேபியா, தற்போது அரிசித் தட்டுப்பாட்டால் அவதியுற்று வருகிறது. இதனால் இந்தியாவிடம் பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

சவுதி வர்த்தக மற்றும் தொழிற்துறைக் கூட்டமைப்புக் குழு இந்திய அதிகாரி‌களுட‌‌ன் இது குறித்து தொடர்பில் உள்ளதாக ரியாதில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதுவர் ராஜீவ் ஷஹாரே தெரிவித்தார்.

முன்னதாக இந்திய திட்டக் ‌க‌மிஷ‌ன் துணைத்தலைவர் மோன்டேக் சிங் அலுவாலியா சவுதி அரேபியா வந்திருந்த போது இந்திய அரிசி ஏற்றுமதி குறித்து சவுதி அதிகாரிகள் அவரிடம் விவாதித்ததாகக் கூறிய ஷஹாரே, உயர் தர பாசுமதி அரிசி மீதான ஏற்றுமதித் தடைகள் ஏதுமில்லை என்றார்.

உலகின் இரண்டாவது பெரிய அரிசி ஏற்றுமதி நாடான இந்தியா பாசுமதி அல்லாத அனைத்து வகை அரிசி ஏற்றுமதிகளையும் மார்ச் மாதம் தடை செய்தது.

ஆண்டுதோறும் சவுதி அரேபியாவிற்கு மட்டும் இந்தியா 5 லட்சம் முதல் 6 லட்சம் டன்கள் பாசுமதி அரிசியை எற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்