மியான்மர்: பிரான்ஸ் நிவாரணக் கப்பலுக்கு இன்னமும் அனுமதியில்லை!
சனி, 17 மே 2008 (15:27 IST)
சுமார் 1லட்சத்திற்கும் அதிகமானோரை பலி வாங்கிய நர்கீஸ் சூறாவளி நிவாரணத்திற்காக மியான்மாருக்கு பிரான்ஸ் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலுக்கு மியான்மார் அரசு இன்னமும் நுழைவு அனுமதி வழங்கவில்லை.
புயலால் பாதிக்கப்பட்ட மேலும் 2.5 மில்லியன் மக்களுக்கு நிவாரண உதவி குறித்த நேரத்தில் போய்ச் சேரவில்லை என்றால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உதவிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு அளிப்பதில் எந்தவித வசதிகளும் இல்லாத நிலையில், மியான்மார் ராணுவ ஆட்சியினர் உதவிப் பொருட்கள் அரசு வாயிலாகவே செல்லவேண்டும் என்று கூறிவருகிறது.
இன்று வந்து சேரவிருக்கும் பிரான்ஸ் கப்பலில் சுமார் 1,500 டன்கள் உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளன. பிரான்ஸ் அரசு இன்னமும் மியான்மார் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டோருக்கு செல்ல விடாமல் மியான்மார் ராணுவ ஆட்சியினர் தடுப்பது மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்று பிரான்ஸிற்கான ஐ.நா. தூதர் ஜான் மாரிஸ் ரிபெர்ட் எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகள் போய்ச் சேருவதில் தாமதம் ஏற்பட்டால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படலாம் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.