மியான்மார்: புய‌லி‌ல் 41,000 பேரை காண‌‌வி‌ல்லை! பலி 22,000ஐ தாண்டியது

புதன், 7 மே 2008 (14:49 IST)
மியான்மாரில் சமீபத்தில் அடித்து ஓய்ந்த நர்கீஸ் புயற் காற்றிற்கு பலியானோர் எண்ணிக்கை 22,000 பேர்களையும் கடந்து விட்டது என்றும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 41,000 பேர்கள் என்றும் அரசு தரப்பு செய்திகள் கூறுகின்றன.

கடும் பாதிப்பிற்குள்ளான இர்ராவட்டி டெல்டா பகுதிக்கு உதவிப் பொருட்கள் விரைந்தவண்ணம் உள்ளன.

வயல்கக‌ளி‌ல் பிணங்கள் நிறைந்து காணப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தப் புயல் தாக்குவதற்கு 48 மணி நேரம் முன்பு மியான்மாரை எச்சரிக்கை செய்ததாக இந்திய வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் குறித்த நேரத்தில் பலர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வேறு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியவில்லை.

இந்த புயல் நிவாரண உதவியில் ஈடுபட்டு வரும் ஒரு அமைப்பு, சாவு எண்ணிக்கை 50,000த்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்துள்ளது.

மியான்மாரின் ராணுவ ஆட்சி சர்வதேச உதவிகளை விரைவில் நாட்டிற்குள் அனுமதிக்குமாறும் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீட்புப் பணிகளுக்காக கப்பற்படை கப்பல்களை அனுப்பவும் தயார் என்று கூறியுள்ளார்.

இந்தியா அனுப்பிய மருத்துவ, உணவு மற்றும் உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இன்று மியான்மாரை அடைந்து விடும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்