மியான்மரில் 'நர்கீஸ்' புயல் தாக்குதல்: 350 பேர் பலி!
திங்கள், 5 மே 2008 (17:47 IST)
வங்கக் கடலில் உருவான 'நர்கீஸ்' புயல் மியான்மர் நாட்டைத் தாக்கியதில் 350 க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இரண்டு முக்கிய நகரங்களில் சுமார் 75 விழுக்காடு கட்டடங்கள் தரைமட்டமாகின.
வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான 'நர்கீஸ்' புயல் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களைத் தாக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் புயல் திசைமாறி மியான்மர் நாட்டை நோக்கிச் சென்றுவிட்டது.
இந்நிலையில், திட்டமிட்டபடி மியான்மர் நாட்டை 'நர்கீஸ்' புயல் தாக்கியது. அப்போது தலைநகர் யங்கூன், இர்ரவட்டி பாசனப் பகுதிகளில் மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதாக அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
யங்கூனில் 100 பேரும், இர்ரவட்டி பாசனப் பகுதிகளில் 250 பேரும் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும், இடிபாடுகளில் சிக்கியும் பலியாயினர். பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதால், இப்பணி முடியும்போது சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், 'நர்கீஸ்' புயல் தாக்குதலால் இர்ரவட்டி பாசனப் பகுதியில் உள்ள லபுட்டா, கியாய்க் லட் ஆகிய நகரங்களில் உள்ள 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட கட்டடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகிவிட்டதாகவும் மியான்மர் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது.
யங்கூன் துறைமுகத்தில் 4 கப்பல்கள் நீரில் மூழ்கின. யங்கூன் விமான நிலையத்திற்கு வரவேண்டிய விமானங்கள் மண்டலே விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டன. அந்நகரம் முழுவதும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.