பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் உள்ள மர்தான் நகரில் காவல் நிலையம் அருகே குண்டு வெடித்ததில் காவலர் ஒருவர் உட்பட 3 பேர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை பாகிஸ்தான் நேரம் 6 மணியளவில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவிக்கிறது.
காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பில் காவல் நிலையத்தின் வெளிப்புறச் சுவர் கடுமையாக சேதம் அடைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தோரில் பலர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்பதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானில் புதிய கூட்டணி அரசு பதவியேற்றபிறகு நடத்தப்படும் முதல் குண்டுவெடிப்பு தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.