மலேசியாவில் தமிழ் நாளிதழக்குத் தடை!
வியாழன், 17 ஏப்ரல் 2008 (19:37 IST)
மலேசியாவில் இந்திய வம்சாவழியினர் பெருமளவில் வாசிக்கும் தமிழ் நாளிதழான "மக்கள் ஓசை' க்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் தவறான செய்திகளை வெளியிட்டதன் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர்.ராஜன் கூறுகையில், "பத்திரிகையின் உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது என்று மலேசிய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் காரணம் எதுவும் கூறப்படவில்லை" என்றார்.
"நாங்கள் வெளியிட்ட செய்திகளால்தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம். நாங்கள் நிறைய சமூகப் பிரச்சனைகளை எழுதினோம். அதனால் அமைச்சகத்திற்கு ஒருவிதமான கோபம் ஏற்பட்டிருக்கலாம்.
குறிப்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தங்களுக்குச் சமஉரிமை கோரி 20,000 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவழியினர் நடத்திய பேரணி பற்றி விரிவாகச் செய்திகளை வெளியிட்டோம்.
இதையடுத்து இந்தியர்கள் போராட்டம் பற்றிய செய்திகளைக் குறைத்து வெளியிடுமாறு அரசு தரப்பில் கூறப்பட்டது" என்றார் ராஜன்.
அமைச்சகம் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் ஓசை தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும், உரிமத்தைப் புதுப்பித்தால் செய்திகளை வெளியிடுவதில் இன்னும் கவனமாக நடந்துகொள்வோம் என்றும் அவர் உறுதி கூறினார்.
இதுகுறித்து மலேசிய உள்துறை அமைச்சர் ஹமீது அல்பரிடம் கேட்டதற்கு, அந்தப் பத்திரிகை அமைச்சகத்தின் விதிகளை மீறி விட்டது என்பதைத் தவிர வேறு எதையும் விரிவாகத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.