திபெத்தில் பண்பாட்டு அழிப்பை மேற்கொள்ளும் சீனா: தலாய் லாமா குற்றச்சாற்று!
செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (18:50 IST)
திபெத்திற்கு அர்த்தமுள்ள தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, தனது நாட்டில் சீனா பண்பாட்டு அழிப்பை மேற்கொண்டு வருவதாகக் குற்றம்சாற்றினார்.
இதுகுறித்து அவர் வாஷிங்டனில் அமெரிக்க தேசிய வானொலிக்கு அளித்துள்ள பேட்டியில், திபெத்திற்குத் தான் ஒருநாள் நிச்சயமாகத் திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"எங்களிடம் எங்களுடைய மொழி, எங்களுடைய எழுத்து உள்ளிட்ட எங்களுக்கான ஒன்றுபட்ட பண்பாட்டுப் பெருமைமிக்க விடயங்கள் உள்ளன.
இந்த விடயங்கள் நிச்சயமாக எங்கள் மதம், எங்கள் பண்பாட்டைப் பற்றி அறிந்த திபெத்தியர்களின் கைகளில்தான் இருக்க வேண்டும்.
தற்போதுள்ள சூழலில் விருப்பத்துடனோ அல்லது விருப்பமில்லாமலோ ஒரு வகையான பண்பாட்டு அழிப்பு நடந்து கொண்டுள்ளது" என்றார் தலாய் லாமா.
தன்னாட்சி விதியின்படி அயலுறவு விவகாரங்கள் சீன அரசிடமும், மற்ற உள் விவகாரங்கள் திபெத்தியர்களிடமும் இருக்க வேண்டும் என்ற அவர், "தற்பொது தன்னாட்சி என்பது வெறும் காகிதத்தில்தான் உள்ளது. இதனால் எங்களுக்கு அர்த்தமுள்ள தன்னாட்சி அதிகாரங்களைத் தருமாறு சீன அரசிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
திபெத்தில் சீனப் படைகளின் அடக்குமுறை நடவடிக்கைகள் பற்றிக் கவலை தெரிவித்த தலாய் லாமா, "இதுபோன்ற நடவடிக்கைகள் தொடருமானால் பதற்றமான சூழலும் நீடிக்கும். இதனால் இயல்பாகவே பிரச்சனைகளும் பாதிப்புகளும் அதிகரிக்கும். திபெத்திய புத்தமதப் பண்பாட்டிற்கு மிகப்பெரிய சேதம் உண்டாகும். அதுதான் எங்களின் கவலையாக உள்ளது" என்றார்.
திபெத்தில் கலவரம் வெடித்த பிறகு முதல்முறையாக அமெரிக்காவிற்குத் தலாய் லாமா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.