வானிலை மாற்றத்தால் தொற்றுநோய் அபாயம் : உலக சுகாதார அமைப்பு!

திங்கள், 7 ஏப்ரல் 2008 (19:12 IST)
புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் மானுட உடல் நிலையை கடுமையாக பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ள ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு (WHO) இதனால் தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது.

உலக சுகாதார நாளான இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு, வானிலை மாற்றத்தால் காற்றின் தரம் (அதிலுள்ள ஆக்சிஜன் அளவு) கடுமையாக பாதிக்கப்படலாம் என்றும், அதன் காரணமாக சுவாச நோய்கள் அதிகப்படலாம் என்றும் கூறியுள்ளது.

கோடைக் காலங்களில் வீசும் அனல் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கலாம் என்றும், அது வீசும் காலம் நீடிக்கலாம் என்றும், இந்த மாற்றம் பொதுவாக குழந்தைகளை பாதிப்பது மட்டுமின்றி, இதய துடிப்பை பாதிக்கும் சாத்தியம் உள்ளது என்றும் கூறியுள்ளது.

வானிலை மாற்றத்தால் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க உலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக, தண்ணீரால் பரவும் காலரா, வாந்தி-பேதி ஆகியவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தக்கூடிய மருந்துகளை விநியோகிக்கும் அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்