டாக்கா- கொல்கத்தா ரயில் சேவைக்கு வங்கதேச அரசு ஒப்புதல்!
திங்கள், 7 ஏப்ரல் 2008 (14:37 IST)
இந்தியா-வங்கதேசம் இடையேயான புதிய பயணிகள் ரயில் சேவையை வரும் 14 ஆம் தேதி முதல் துவக்க வங்கதேச அரசு அளித்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையில் நாளை கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் பருக்தீன் அஹ்மது தலைமையில் நேற்று கூடி விவாதித்தது. அதில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கதேச அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இறுதிகட்ட ஒப்பந்தத்தில் இருநாட்டு அதிகாரிகளும் நாளை கையெழுத்திட உள்ளனர்.
முன்னதாக, ரயில் செல்லும் பகுதிகளின் இருபுறமும் தற்காலிக தடுப்புச்சுவர் அமைக்க பிப்ரவரி 24 ஆம் தேதி இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த 'நல்லுறவு' எக்ஸ்பிரஸ் ரயிலில் 418 இருக்கைகள் உள்ளன. பயணிகள் கட்டணம் 8 அமெரிக்க டாலர் முதல் 20 அமெரிக்க டாலர் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் டாக்காவின் கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து தர்ஷணா எல்லை வழியாக, கொல்கத்தாவின் சிட்பூர் ரயில் நிலையம் வரை இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் சேவையை பெங்காலி புது வருடப் பிறப்பான ஏப்ரல் 14ஆம் முதல் துவக்க உத்தேசித்துள்ளதாக தொலை தொடர்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் இஸ்மாயில் தெரிவித்தார்.