பொதுத் துறையில் இந்தியர்களுக்கு அதிக இடம்: மலேசியக் காங்கிரஸ் கோரிக்கை!
சனி, 5 ஏப்ரல் 2008 (15:16 IST)
பொதுத் துறைகளில் தகுதியுள்ள இந்தியர்களுக்கு உள்ள ஒதுக்கீட்டை 8 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று மலேசிய இந்தியக் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
மலேசிய அரசின் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் பொதுத் துறைகளுக்கு தேர்வு செய்யப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை 5 விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூரில் கூடிய மலேசியக் காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில், இந்தியச் சமூகத்தினிடையே வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க, தற்போது பணியமர்த்தப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை போதாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய இந்தியக் காங்கிரசின் தலைவர் எஸ்.சாமி வேலு, பொதுத் துறையில் உள்ள அரசு சார்ந்த நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் இந்தியர்களை பணியமர்த்தும் பணிகளை மலேசிய அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் கீழ் மலேசிய இந்தியக் காங்கிரஸ் முன் வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமானால், இந்தியச் சமூகத்தினரிடையே இழந்துள்ள ஆதரவை ஆளும் பாரிசான் தேசியக் கூட்டணி மீண்டும் பெற முடியும் என்றார் அவர்.